யாழ் இந்து அன்னையின் மடியிலே தவழும் குழந்தைகள் தரணியெங்கும் புகழ் பரப்பும் கல்விமான்களாக உயர்வு பெற்று யாழ் இந்து அன்னைக்கு மகுடம் சூட்டி வரும் இத்தருணத்திலே தாயகத்தில் வாழும் புத்திஜீவிகளையும், புலம்பெயர்ந்து வாழும் புலமையாளர்களையும் ஒன்று சேர்க்கும் பாலமாக பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முகிழ்ந்து மணம் பரப்ப ஆரம்பித்துள்ளது. இந்தப் பொன்னான சந்தர்ப்பம் யாழ் இந்துக் கல்லூரியின் வரலாற்றில் சிறப்பு முத்திரை பதிக்கப்பட்டு போற்றப்படும் என்பது என் எண்ணமாகும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சாதனைகளையும், நினைவுகளையும் பதிவு செய்யவும் பாதுகாக்கவும் ஏற்ற ஊடகமாகவும் இத்தளம் எதிர்காலத்தில் அமையும். தமிழர் வரலாறும் பண்பாடும் யாழ் இந்துக் கல்லூரியின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து யாழ் இந்துக் கல்லூரியின் வாழ்வு, தமிழரின் வாழ்வு, யாழ் இந்துக் கல்லூரின் சாதனையும், பண்பாடும், யாழ்ப்பாண மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது. எனவே எமது கல்லூரின் தகவல்களையும், பண்பாட்டையும், சாதனைகளையும் ஆவணப்படுத்துவது எமது தமிழ் சமுதாயத்துக்கு நாம் செய்யும் முக்கியமான கடமையாகவும் அமையும்.
சமூக ஊடகங்களும், ஏனைய இலத்திரனியல் ஊடகங்களும் எமது கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தகவல்களை பெறுவதற்கும் சரியான தகவல்கள் வெளியிடப்படுவதற்கும் இம் முயற்சி உதவி செய்யும் என்பது எமது நம்பிக்கையாகும்