Google

அனைத்துலங்களில் வாழும் எமது கல்லூரிச் சொந்தங்களுக்கு எமது தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

Written on:November 13, 2012
Comments are closed

அனைத்துலங்களில் வாழும் எமது கல்லூரிச் சொந்தங்களுக்கு எமது தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

தீபாவளி பற்றிய வரலாறு :

தீபம் என்றால் விளக்கு. ஆவளி எனின் வரிசை என்பது பொருள். விளக்குகளை வரிசையாக வைத்து அந்த ஒளியில் இறைவனைக் கண்டு வணங்கக் கொண்டாடுவதே தீபாவளி.விளங்காதிருக்கும் பொருட்களை விளக்கி (தெரியும்படி) காட்டுவதாலேயே விளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இருள் நிறைந்த வேளையிலேயே விளக்குக்குப் பிரகாசம் அதிகம்.

தீபாவளி வரும் நாள்:-

வருடந்தோறும் ஐப்பசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி (14ம்) திதி அன்றிரவு முடியுமுன் உள்ள உதய காலத்தில் இப்பண்டிகை வரும். தீபாவளித் தினத்தன்று நீர் நிலைகளில் கங்கா தேவியும் நல்லெண்ணெய்யில் லக்ஷ்மி தேவியும் சாந்நித்தியம் (எழுந்தருளி) இருப்பதாக ஐப்பசி மாதத்தின் புனிதத் தன்மையினை விளக்கிக்கூறுகின்ற துலாபுராணம் விதந்துரைக்கின்றது.

சாதாரணமாக ஒருவர் புண்ணியம் சேர்க்க வேண்டுமென்றால் உடலுக்கு வேண்டிய சுகபோகங்களை நீக்கி உடலை வாட்டியே பெற வேண்டுமென்பது பொதுவான விதிமுறை.

அனால் இதற்கு நேர் மாறாக எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடைகள் அணிந்து ஆலயம் சென்று வணங்கி, சுவைமிக்க உணவுகளை வீட்டில் ஆண்டவனுக்கு நிவேதனம் செய்து உற்றார் உறவினர்களோடு சேர்ந்து உண்ணுகிறோம். தவத்திற்கும் துறவிற்கும் புறப்பாக நடந்து பாவத்தை நீக்கி ஆன்மாவை புனிதமாக்குவது இத்தினத்தின் முறை.

இப்பண்டிகையைப் பற்றிக் கூறும் புராணக்கதை:-

கொடிய செயல்களை விட கொடியதான நகரத்தின் பெயரைக் கொண்டவனே நரகாசுரன். பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாக்கன் எனும் அசுரனிடமிருந்து, வராகவதாரம் எடுத்து மகா விஷ்ணுமூர்த்தி பூமியை மீட்டுவந்து நிலை நிறுத்திய வேளை விஷ்ணுவுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவனே இந்த நரகாசுரன்.

பிரம்மாவிடம் தவம் செய்து பல அரிய வரங்களைப் பெற்ற இவன் தந்தையும் தாயுமே தன்னை அழிக்க வேண்டுமென வினோதமான வரத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டான். பின் தனது தலை நகரமான ‘பிராக் ஜோதிஷ‘ புரத்தில் எவரும் புனிதமான காரியத்தைக் செய்யலாகாது என ஆணையிட்டு அரசாண்டு வந்தான்.

தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் ஆகியோருக்கு அளவற்ற அல்லல்களைக் கொடுத்து வந்த நரகாசுரனின் கொடுமைகளைப் பொறுக்க முடியாத தேவர்கள் இறைவனை வேண்டினர். அவர் காத்தற் கடவுளாகிய மகாவிஷ்ணுவுக்கு பஞ்சாயுதங்களை (சக்கரம், தனு, வாள், தண்டு, சங்கு)க் கொடுத்து நரகாசுரனைக் கொன்று காத்தருளுமாறு ஏவினார்.

சத்தியபாமையுடன் போர்க்களம் சென்று கடும் சமர் புரிந்த விஷ்ணு சிறிது சோர்வடைய, சத்தியபாமை அம்புகளால் கடுமையாகத் தாக்கி மயங்கும்படி செய்தார். சாகும்.

நிலையெய்திய நரகாசுரன் அப்போது நல்லறிவு பெற்றான். அவன் செய்யக் கூடாது என்று தடை விதித்த காரியங்களை எல்லாம் மக்கள் யாவரும் தன்னை நினைத்து செய்ய வேண்டும். இந்நாளை மக்கள் யாவரும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என விஷ்ணுவிடம் வரம் கேட்டான். மஹா விஷ்ணு மூர்த்தியும் அவ்வாறே அருள்புரிந்து அவனைத் தூய்மையாக்கிப் பரமபதம் கொடுத்தருளினார்.

இதனால் நாம் பெறும் உபதேசம்:-

கொடியவர்களுள் கொடியவனான நரகாசுரன் தனது இறுதிக் கோரிக் கையாக தான் இறந்த நாளில் எங்கும் பிரகாசிக்கும் ஒளியும், எல்லா நீர் நிலைகளில் உள்ள நீரும் எண்ணெய்யும் மக்களின் குறைகளையும் பாவங்களையும் போக்கி மக்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று தான் தன் வாழ்வு முடியும் வேளையில் வேண்டினான்.

இவ்வுலகில்தான் வாழாத போது ஏனையோரும் வாழாமலிருக்க வேண்டும் என்பதே இயற்கை. ஆனால் தன் வாழ்வு முடியும் போது உலகம் முழுவதும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் உள்ளமே சிறந்த உள்ளம் இக்கொடிய நரகாசுரனுக்கு இத்தகைய பெருந்தன்மை ஏற்பட்டதற்குக் காரணம் என்ன தெரியுமா? இறைவனின் கடைக்கண் நோக்கினால் அல்லவா.

புத்தொளி பெறும் நாள்:- தீபாவளிப் பண்டிகை ஒளியை முக்கியமாகக் கொண்டது. சந்தோஷங்களுக்கும் அதன் விளைவான அச்சங்களுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முக்கிய காரணம் மனதில் இருக்கும் இருளேயாகும். இவ்விருள் அகல ஒளி தேவை. இறைவனே அப்பேரொளி.

நாம் எமது உள்ளத்தை இறைவனோடு தொடர்புபடுத்தும் போது அவ்வொளி சுடர் விட்டுப் பிரகாசிக்கும். உள்ளொளியினால் உண்மை விளக்கமும் தெளிவும் பிறக்கும். அத்தெளிவை இறைவனோடு சேர்த்து வழிபடும் போது அது நிலைக்குமல்லவா?

எனவே இருட்டிலிருந்து ஒளியை அடையவும், மன அழுக்கில் இருந்து தூய்மை பெறவும், மனமாசுகளிலிருந்து நீங்கவும், ஒவ்வொரு குடும்பமும் நாடும் லக்ஷ்மிகரமாக விளங்கவும் சோதிரூபனான பரம்பொருளை தீபத்தில் ஆவாகனம் செய்து வழிபடுவோமாக ‘நன்மை செய்யாவிடினும் தீமை செய்யாதே” என்ற மொழிக்கிணங்க நாமனைவரும் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம்.

ஏதோவொரு விதத்தில் துன்புறும் மக்களின் துயர் துடைக்க பாடுபடுவோம்.

“லோகாஸ் ஸமஸ்தாஸ் சுகினு யவந்து”
‘மாந்தரனை வரும் இன்புற்று வாழ்க’

Sorry, the comment form is closed at this time.