Google

யாழ் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Written on:June 23, 2012
Comments are closed

யாழ். இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 22/06/2012 அன்று கல்லூரி அதிபர் வீ. கணேசராசா தலைமையில் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் லண்டன் உள்ளூராட்சி அமைச்சின் நெடுஞ்சாலை திணைக்கள பொறியியலாளருமான வை. சண்முகலிங்கம், மற்றும் அவரது பாரியார் திருமதி ஷோபனா சண்முகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வினை தொடர்ந்து ஆசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினரும் ,அவரது பாரியாரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள். இதன் பின் விருந்தினர்கள் பான்ட் வாத்தியத்தோடு குமாரசுவாமி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

மேடை நிகழ்வின் முதல் நிகழ்வாக தேவாரமும் அதனை தொடர்ந்து வரவேற்பு நடனமும் இடம் பெற்றது. பின் அதிபர் அவர்கள் 2011 ஆம் ஆண்டுக்குரிய அதிபர் அறிக்கையை வாசித்தார். பின் அடுத்த நிகழ்வாக பிரதம விருந்தினருடைய உரை நடைபெற்றது.

அதன் பிற்பாடு 2005ம் ஆண்டு உயர்தரத்தில் தோற்றி பாடசாலையில் இருந்து வெளியேறிய மாணவர்களால் 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான நூல்கள் பாடசாலை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இப் பரிசளிப்பு நிகழ்வில் தரம் 6 தொடக்கம் தரம் 12 வரையிலான மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டுக்களின் திறமையின் அடிப்படையில் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில் வகுப்புத் தேர்ச்சி ,2011ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் என்ற ரீதியில் 350 மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் 77 மாணவர்களுக்கு பதக்கங்களும், 21மாணவர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கான வர்ண விருதுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ,அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்ககள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Sorry, the comment form is closed at this time.