Google

யாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா -2013

Written on:October 5, 2013
Comments are closed

Untitled-1 copyயாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இம்மாதம் 11 திகதி மாலை 3.30 மணியளவில் குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்விற்கு வட மாகாண கல்வியமைச்சின் செயலாளரும் யாழ் இந்துவின் பழைய மாணவருமாகிய திரு.சிவலிங்கம் சத்தியசீலன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

மாணவர்களுக்கான பரிசில்களை பிரதம விருந்தினரின் பாரியார் திருமதி. இராஜராஜேஸ்வரி சத்தியசீலன் அவர்கள் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

Untitled-1 copy

 

பிரதம விருந்தினர் பற்றிய குறிப்புக்கள்.

திரு.சிவலிங்கம் சத்தியசீலன் அவர்கள் , 1974 ஆம் ஆண்டு எங்கள் கல்லூரியால் நடாத்தப் பெறும் 6ஆம் தரத்திற்கான பிரவேசப் பரீட்சையில் முன்னைத் தவத்தின் பயனாலும் கல்லூரி அன்னையின் மைந்தனாக சேர்ந்து கொண்டார். ‘கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத்தக’ என்ற மகுட வாக்கியத்தை உணர்ந்து கற்பதிலும் கற்ற வழி நிற்பதிலும் வல்லவராக இருந்ததால் வாய்ப்புக்களும் சந்தர்ப்பங்களும் அவரை நாடித்தேடி வந்தன. இவரது அமைதியான சுபாபத்தையும் இதமான வார்த்தைகளையும் பயன்பாடு நிறைந்த கருத்துக்களையும் கண்டு ஆசிரியர்களும் மாணவர்களும் வியந்து போற்றினர். சிறப்பாகவும் செவ்வையாகவும் பணி ஆற்றும் இவரது இயல் பினை உய்த்தறிந்த விடுதிப் பொறுப்பாசிரியர் விடுதி மாணவ தலைவராக்கிய வேளையில் எவருடனும் அந்நியோன்னியமாகவும் நீதி நியாயத்தை வழிப்படுத்தும் வினைதிறன் மிக்கவராக விளங்கினார். அவ்வேளையில் வறுமை நிலைக்குரிய மாணவர்களை இனங்கண்டு ஒரு கையால் கொடுப்பதை மறுகை அறியாதவகையில் வழங்கிய உதவிகளால் அடி மனதிலிருந்தே இனிமையான நட்பினை நீடித்து வளர்த்தார். கல்லூரியில் நடைபெற்ற கலை விழாக்கள் பொருட் காட்சிகள் விளையாட்டுப் போட்டிகள் என்பவற்றில் பெரும்பங்காற்றி பூரண ஆளுமைத் தன்மையை பலபரிமாணங்களிலும் பெற்று பரிணமித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டதுடன் (முதுகலைமாணி பிராந்திய திட்டமிடல் பட்டத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக முதுகலைமாணிப்பட்டத்தைப் பெற்று அரச சேவைப் பதவிகளில் முத்திரை பதித்து வருகின்றார். அனுபவமிக்க அரச நிர்வாகிகளுடன் நெருங்கிப் பழகி தொடர்பினை வளர்த்து வருகின்றமையால் பணி செய்யும் பண்பினையும் பட்டறிவையும் கலந்துரையாடுவதுடன் கட்டுப்பாடு ஈவிரக்கம் நெகிழ்வுத் தன்மை முன்னோடியான நடத்தை ஆகியவற்றை பணிகளில் இணைத்து எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வெற்றிகொண்டார் என்பது வெளிப்படையாகும்.

கிடைத்த சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் காலத்திற்கேற்ப பொருத்தமாக பயன்படுத்துவதிலுள்ள வலிமையை உணர்ந்து 1985 ஆம் ஆண்டு பதுளை சார்னியா வித்தியாலயத்தில் விஞ்ஞான பாட ஆசிரியராக கால் பதித்து 1988ல் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்று ஆசிரியத்தொழிலை மெருகூட்டினார். மெய்ஞ்ஞானத்துடன் விஞ்ஞானமும் இணைந்த இவரது போதனையால் சாதனை படைத்த மாணவர்கள் பலராவர்.

1995 ல் இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து வவுனியா மாவட்டத்தில் உதவி பிரதேச செயலாளராகவும், பல பிரிவுகளின் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய காலத்தில் ஊழியர்களதும் பொது மக்களதும் நன்மதிப்பை பெற்று சிறந்த அரச சேவையாளராக நன்மதிப்பைப் பெற்றார். மிகவும் கஷ்டமான காலத்தில் போர்க்காலச் சூழ்நிலையில் புலம் பெயர்ந்து வந்த மக்களுக்கு இரவு பகலெனப் பாராது தமர் பிறர் எனக்கருதாது பணி செய்தமையால் அனைவராலும் நேசிக்கபட்டார். சமூக விழுமியங்களுக்கு மதிப்புக் கொடுத்து மானிடம் மாண்புற வைத்தார்.

2003ஆம் ஆண்டு கரவெட்டிப் பிரதேச செயலகத்தில் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் கரவெட்டியின் அபிவிருத்திக்காக அர்ப்பணித்து செயற்பட்டதோடு திட்டங்களை வகுத்துத் தொகுத்து முன்னுரிமைப்படுத்தி நடைமுறைப்படுத்துவதில் அயராது உழைத்தது மட்டுமன்றி மக்கள் தேவையறிந்து சேவையாற்றி அனைவரதும் அன்பினையும் ஆதரவையும் பெற்று மக்கள் மனதை வென்றார். இதன் பயனாக 2011ஆம் ஆண்டு பிரதேச செயலகங்களின் முகாமைத்துவப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தையும் பெற்றதால் உயர் விருதுகளையும் பெற்றுக்கொண்டார்.

திறமையுள்ளவர்கள் தாங்கள் அடைய நினைக்கும் எதிர்பார்ப்புக்களை இலக்குகளை இலகுவாக அடைவார்கள் என்பதற்பேற்ப 2012 ஆம் ஆண்டு முதல் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஆகிய உயர் பதவி தனது மைந்தன் ஒருவருக்கு கிடைத்ததை அறிந்த கல்லூரி அன்னை மகிழ்ந்து வியந்து நிற்கின்றாள். தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையைப் போல் தன்னை வளர்த்தெடுத்த கல்லூரியை நேசிக்கும் அவர் தன்னால் முடிந்த உதவிகளை மனங்கோணாமல் துறைசார் விடயங்களையும் பௌதிக வளங்களையும் செய்ந்நன்றி மறவாது  இந்து கல்லூரிக்கு வழங்கி வருகின்றார். அரச புலமைப் பரிசில் பெற்று மலேசியா இந்தோனேசியா நாடுகளுக்கு கல்வி களப்பயணம் மேற்கொண்ட அறிவும் அனுபவமும் கல்விக் சமூகத்திற்கு பெரும் நன்மையை அளித்து வருகின்றது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேணிப்பாதுகாத்து நிலை நிறுத்தி வருவதுடன் கல்வி அபிவிருத்தித் திட்டங்களை முன்னுரிமைப்படுத்தி வருகின்றார்.கல்விப் பணியில் தலைநிமிர் கழகத்தின் தவப்புதல்வன் அன்னையின் நன்றி மறவா நல்லுறவாளனாக உறவாடிவருவதை நினைந்து நாம் எல்லோரும் பெருமைபடுவோமாக.

வாழிய யாழ்நகர் இந்து கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்

Sorry, the comment form is closed at this time.