Google

யாழ் இந்துவில் நடைபெறும் யாழ். இந்து அணிக்கும் கொழும்பு ஆனந்தா அணிக்கும் இடையிலான “வீ.ரீ.எஸ். சிவகுருநாதன் கிண்ணத்திற்கான” நட்புறவு கிரிக்கெட் போட்டி

Written on:April 24, 2013
Comments are closed

525208_637016886324782_1414705751_nயாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணிக்கும் இடையிலான “வீ.ரீ.எஸ். சிவகுருநாதன்” கிண்ணத்திற்கான இரண்டாவது வருடாந்த நட்புறவு கிரிக்கெட் போட்டி யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் 26ஆம், 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இனங்களிடையே நல்லிணக்கம், நட்புறவு, சகோதரத்துவம் நிலைக்கவேணடும் என்ற உயரிய நோக்குடன் இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது.

jj

aa

ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்த இரண்டு பாடசாலைகளுக்கும் உறவுப் பாலமாக இருந்த ஒருவரின் பெயரில் நட்புறவு கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு இரண்டு பாட சாலைகளினதும் பழைய மாணவர் சங்கங்களும் இணங்கியதன் பலனாக இப்போட்டி கடந்த வருடம் முளைவிட்டது. யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி கற்று பிற்காலத்தில் இருபது வருடங்களுக்கு மேலாக ஆனந்தாக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றி, தலைமையாசிரியர் தரத்துக்கு உயர்த்தப்பட்ட அமரர் வீ.ரீ.எஸ்.சிவகுருநாதனை கௌரவிக்கும் வகையிலேயே இந்த நட்புறவுக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. ஆனந்தாக் கல்லூரியின் 125 ஆவது வருடாந்தப் பூர்த்தி விழாவின்போது அப்போதைய பழைய மாணவர் சங்கத் தலைவர் திலக் கருணாரட்ன இப்போட்டியை நடத்துவதற்கான யோசனையைத் தன்னிடம் முன்வைத்தார் என யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் போஷகரும் கொழும்புக் கிளையின் இதற்கு முன்னைய தலைவரும் தற்போது இந்த ஆட்டத்துக்கான திட்ட ஏற்பாட்டாளருமான எஸ்.இராகவன் தெரிவித்தார். சில தடைகளுக்கு மத்தியில் இரண்டு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர் எடுத்துக்கொண்ட விடாமுயற்சியாலும் கல்லூரிகளினது அதிபர்களது ஒத்துழைப்பினாலும் இந்த எத்தனம் வெற்றி அளித்ததாக இராகவன் குறிப்பிட்டார். மேலும் இப்போட்டியைக் கண்டுகளிக்கவென ஆனந்தாக் கல்லூரியின் தற்போதைய மற்றும் பழைய மாணவர்கள் அடங்கிய 200 இற்கும் மேற்பட்டவர்கள் யாழ்.வரவுள்ளமை விசேட அம்சமாகும்.

எனவே யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் இப்போட்டிக்கு வருகை தந்து உற்சாகப்படுத்துமாறு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வருடப் போட்டி யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையினரின் பூரண அனுசரணையுடன் நடைபெறவுள்ளதுடன் ஆரம்ப வைபவத்தில் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் பெருமைக்குரிய பழைய மாணவர் ஒருவர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார் என்றும் தெரி விக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கடந்த வருடத்தைப் போன்றே ஆனந்தாக் கல்லூரி அதிபர் கேணல் எல்.என்.டி. தர்மசேனா தமிழ் மொழியிலும், இந்துக் கல்லூரி அதிபர் வீ.கணேசராசா சிங்கள மொழியிலும் சிறப்புரைகள் ஆற்றவுள்ளனர் என்றும் கூறப்பட்டது.

இரண்டாம் நாள் போட்டி முடிவில் பரிசளிப்பு வைபவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து யாழ். கிறீன் கிராஸ் ஹோட்டலில் யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதனின் தலைமையில் முக்கிய விருந்தாளிகளின் ஒன்றுகூடலும் இரவுப் போசன விருந்தும் நடைபெறும். இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் கடந்த வருடம் நடைபெற்ற அங்குரார்ப்பண வீ.ரீ.எஸ். சிவகுருநாதன் கிண்ண நட்புறவுக் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்டுக்களால் ஆனந்தாக் கல்லூரி வெற்றியீட்டியது. இவ்வருடம் தனது சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் யாழ். இந்துக் கல்லூரி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் போட்டியில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை விட நட்புறவும் சகோதரத்துவமும் வெற்றிபெற்று அது நிலைத்திருக்கவேண்டும் என்பதே பலரதும் பிரார்த்தனை ஆகும்.

Sorry, the comment form is closed at this time.